ACJU/NGS/2024/410
2024.11.29 (1446.05.26)
அம்பாறை மாவட்டம் - நிந்தவூர் காஷிஃபுல் உலூம் அரபுக் கல்லூரியில் கல்வி பயின்றுகொண்டிருந்த சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த சில மாணவர்களும் அவர்களுடன் பயணித்த பொதுமக்கள் சிலரும் கடந்த 2024.11.26 ஆம் திகதி விபத்தின் போது நீரில் மூழ்கி மரணமடைந்தனர் என்ற செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவ்வேளையில் அவர்களது மறைவினால் துயருற்றிருக்கும் பெற்றோர், குடும்பத்தினர்கள், உறவினர்கள், நிர்வாகத்தினர், உஸ்தாத்மார்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு சார்பிலும் அனைத்து ஆலிம்கள் சார்பிலும் ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்தோடு இவ்வெள்ள அனர்த்தத்தினால் நாடு பூராகவும் மற்றும் சிலரும் மரணித்துள்ளனர் என்ற விடயத்திலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பெரிதும் கவலையடைவதுடன், காணாமல் போய் இது வரையில் தகவல்கள் அறியமுடியாதுள்ள மாணவர் பூரண ஆரோக்கியத்துடன் விரைவாகக் கிடைக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறோம்.
சன்மார்க்கக் கல்வியைப் பயின்று கொண்டிருக்கும் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறார் என்ற அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள்வாக்கின் அடிப்படையில் அல் குர்ஆனைச் சுமந்த அம்மாணவர்கள் அல்லாஹ்வின் பாதையில் இருந்த நிலையில் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்லாஹு தஆலா மரணித்தவர்களது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!
மேலும் அவர்களது மறுமை வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தையும் நற்பாக்கியங்களையும் வழங்கி, பெற்றார் மற்றும் குடும்பத்தினருக்கு பொறுமையையும் ஆறுதலையும் வழங்கிடுவானாக!!
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ் ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா