2024.11.26 அன்று நாட்டின் 10ஆவது பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி கௌரவ அசோக சப்புமல் ரன்வல அவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் பிரதான சபையான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் செய்து, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சார்பில் அதன் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் என பலரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிமுகம்:
ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் ஜம்இய்யாவின் வரலாறு மற்றும் இலங்கை முஸ்லிம்களின் நிலை குறித்த அறிமுகத்தை வழங்கினார். மேலும், ஜம்இய்யா செயல்படுத்தி வரும் பல்துறை பணிகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இலங்கையில் சகவாழ்வு மற்றும் மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த, ஜம்இய்யா ஒரு அரசியல் சார்பற்ற மத அமைப்பாக செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.
ஜம்இய்யா தலைவரின் உரை:
ஜம்இய்யா தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் தனது உரையில்,
• 1924ஆம் ஆண்டு, காலி பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யாஹ்வில் மூத்த மார்க்க அறிஞர்களால் நிறுவப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, இன்று நூற்றாண்டை கடந்த முக்கியமான மத அமைப்பாக திகழ்வதை நினைவுகூர்ந்தார்.
• ‘பன்மைத்துவ சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகவாழ்வை மேம்படுத்துவது, இஸ்லாத்தின் கொள்கைகளின் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்துக்கு வழிகாட்டுவது’ போன்ற அமைப்பின் முக்கிய இலக்குகளை எடுத்துரைத்தார்.
• அரசியல் மற்றும் ஆட்சியின்பால் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் நீதி, சமத்துவம் மற்றும் தார்மீக தெளிவு ஆகியவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
சபாநாயகருக்கு வழங்கப்பட்ட வெளியீடுகள்:
சபாநாயகருக்கு, சீ.ஜீ. வீரமந்திரீ எழுதிய Islamic Jurisprudence: An International Perspective, ஜம்இய்யாவின் அல-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு, විවෘත දෑසින් ඉස්ලාම්, සමාජ සංවාද, Don’t be extreme போன்ற நூல்களும், ‘மன்ஹஜ்’ (மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்) நூலும் கையளிக்கப்பட்டன.
சபாநாயகர் உரை:
சபாநாயகர் கௌரவ அசோக சப்புமல் ரன்வல அவர்கள் தனது உரையில்,
• நாட்டில் சகல இன மக்களும் தங்கள் மத, கலாசார அடையாளங்களை பேணி வாழும் உரிமை பெற்றுள்ளனர் என குறிப்பிட்டார்.
• ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் பாராளுமன்றில் ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை மேற்கோளிட்டு, நாட்டில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.
• இனவாத, மதவாத சிந்தனைகளை தூண்டி மக்களை பிரிப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது என வலியுறுத்தினார்.
நிகழ்வு நிறைவு:
இந்நிகழ்வின் நிறைவில், ஜம்இய்யா வெளியிட்ட அல-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் ஏனைய முக்கிய நூல்களும் சபாநாயகருக்கு வழங்கப்பட்டன.
- ACJU Media -