ACJU/NGS/2024/408
2024.11.26 -1446.05.23
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ்
கடந்த சில நாட்களாக நாட்டின் சில பாகங்களில் கடுமையான காற்று வீசி வருவதுடன் சீரற்ற காலநிலையும் காணப்படுகின்றது. மேலும் பல பாகங்களில் எதிர்வரும் நாட்களில் கடுமையான காற்று வீசுவதற்கும் கன மழை ஏற்படுவதற்கும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத்தொடர் காற்றின் ஆபத்துக்களிலிருந்தும், அதனால் ஏற்படுகின்ற கஷ்டங்களிலிருந்தும் பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்வதுடன் இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடியுமான உதவிகளைச் செய்யுமாறும் அவ்வப்பிரதேச மக்களிடம் ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.
அத்துடன், கடுமையான காற்று வீசுவதற்கு சாத்தியமுள்ள இடங்களில் உள்ள மக்கள் அரசாங்கம் விடுக்கும் அறிவுறுத்தல்களைக் கேட்டு நடக்குமாறும், உலமாக்கள் தத்தமது பிரதேச மக்களுக்கு இது போன்ற நிலைகளில் எவ்வாறு செயற்பட வேண்டுமென வழிகாட்டுவதுடன் கீழ் வரும் துஆவை அதிகமாக ஓதிவர ஆர்வமூட்டுமாறும் மக்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்பி அவனது உதவிகளை பெற்றுக் கொள்ள வழிகாட்டுமாறும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.
காற்று வேகமாக வீசும் போது ஓத வேண்டிய துஆ:
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
'இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்'
(முஸ்லிம் 899)
அல்லாஹுத்தஆலா சீரான காலநிலையைத் தந்து நம்மனைவரையும் ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பானாக.
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை