ACJU/FTW/2024/41-573
2024.11.19 (1446.05.16)
கேள்வி: கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினி போன்றவற்றில் செயலி (App) மூலம் அல்-குர்ஆனை ஓதுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
அல்-குர்ஆன் அல்லாஹு தஆலாவினால் அருளப்பட்ட இறுதி வேதமாகும். அதனை ஓதுவதால் எண்ணிலடங்காத நன்மைகள் கிடைக்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் தொட்டு ஸஹாபாக்கள் மற்றும் அவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள் என இன்று வரைக்கும் அல்-குர்ஆன் உள்ளங்களில் மனனமிடப்பட்டும் பிரதிகளில் எழுதப்பட்டும், அச்சிடப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வந்துள்ளது. அக்காலத்தில் எழுதப்பட்ட பிரதிகள் இன்றும் நூதனசாலைகளில் காணப்படுகின்றன.
மேலும், ஸஹாபாக்களுடைய காலம் தொட்டு இன்று வரை அல்-குர்ஆனை கையால் எழுதி வரும் வழமை சில இடங்களில் இருந்து வருகின்றது.1
அல்-குர்ஆனை கையால் எழுதுவதும் எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பிரதியை (முஸ்ஹபை) பார்ப்பதும் அதனை முத்தமிடுவதும் அதனைப் பார்த்து ஓதுவதும் நன்மையான காரியங்களாகும்.2 அல்-குர்ஆன் பிரதியை வுழூ இல்லாமல் தொடுவது கூடாது3 எனவும் அதனை ஓதுவதற்கும் தொடுவதற்கும் பெருந்தொடக்கை விட்டும் சுத்தமாக இருப்பது கட்டாயம் எனவும் அதனை மலசல கூடத்திற்குள் கொண்டு செல்வது வெறுக்கத்தக்கது (மக்ரூஹ்) எனவும்4 அதனை ஓதும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளில் மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அல்-குர்ஆனை ஓதும் போது வுழூவுடன் இருப்பது (முஸ்தஹப்) ஸுன்னத் என்றும்5 அதன் பக்கம் பாதங்களை நீட்டுவது (ஹராம்) தடுக்கப்பட்டது என்றும்6, அதன் கண்ணியத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் உயரமான இடங்களில் அதனை வைப்பது கட்டாயம் என்றும்7 மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே, அல்-குர்ஆன் பிரதியை (முஸ்ஹப்) பார்த்து ஓதுவதே அடிப்படையும் ஆர்வமூட்டப்பட்டதுமாகும்.
எனினும், தற்காலத்தில் அல்-குர்ஆன் நவீன சாதனங்களில் செயலி (App) வடிவில் அமைக்கப்படுள்ளது. செயலியில் அல்-குர்ஆன் காட்சியளிக்கும் போது அதற்கு அல்-குர்ஆன் பிரதியின் சட்டங்கள் கவனிக்கப்படும் விடயத்தில் தற்கால மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேற்றுமை நிலவுகின்றது.
கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினி போன்றவற்றில் தோற்றமலிக்கும் செயலிகள், நிழல் படங்களாவன தண்ணீர், கண்ணாடி போன்றவற்றில் தோற்றமளிக்கும் நிழல் போன்றவையாகும்.8 ஆகவே, அவற்றில் உள்ள அல்-குர்ஆன் செயலிகளும் அல்-குர்ஆன் பிரதியாக கருதப்படமாட்டாது என தற்கால பிரபல்யமான சில அறிஞர்களதும் சில ஃபத்வா அமைப்புக்களதும் நிலைப்பாடாகும்.9
எனவே, செயலியில் அல்-குர்ஆனை ஓதுவதனால், ஓதியமைக்கான நன்மை கிடைத்த போதிலும் அல்-குர்ஆன் பிரதியைப் பார்த்து ஓதுதல், அதனை முத்தமிடுதல் போன்றவற்றிற்குக் கிடைக்கும் நன்மைகள் கிடைக்க மாட்டாது எனவும் இச்செயலியைத் தொடுவதற்கு வுழூ இருப்பதும் நிபந்தனை இல்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.10
மேலும், வேறு சில மார்க்க அறிஞர்களும் ஃபத்வா அமைப்புக்களும், செயலியில் அல்-குர்ஆன் காட்சியளிக்கும் போது அது அல்-குர்ஆன் பிரதியாகக் கருதப்படுவதோடு அதைத் தொடுவதற்கு வுழூ இருப்பது நிபந்தனையாகும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
அகவே, மேற்கூறப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் அல்-குர்ஆனை ஓதுபவர் அல்-குர்ஆன் பிரதியைப் பார்த்து ஓதுவது மேலானதாகும். அதனை வழக்கமாக்கிக் கொள்வதே சிறந்ததாகும். அல்-குர்ஆன் பிரதி கிடைக்கப் பெறாத சந்தர்ப்பங்களில் செயலியில் (App) ஓதுவதற்கு முடியும் என்பதுடன் செயலியில் ஓதும் போதும் அதனை வுழூவுடன் தொடுவதே ஏற்றமானதாகும்.
அல்-குர்ஆன் செயலி (App) கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினி போன்ற சாதனங்களில் ஏனைய செயலிகளுடன் இணைந்ததாகவும், பிரத்தியேகமாகவும் இருப்பதுடன் இன்னும் சில சாதனங்கள் அல்-குர்ஆன் செயலிக்கென்றே தனியாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் அல்-குர்ஆன் செயலி (App) மாத்திரம் உள்ளதைப் பயன்படுத்துவதே மிகவும் பொருத்தமாகும்.
தொலைபேசி மற்றும் மடிக்கணினி போன்றவற்றில் அல்-குர்ஆன் செயலியைப் பயன்படுத்துவோர் அல்-குர்ஆனின் கண்ணியத்தைக் கவனத்திற் கொண்டு அவற்றில் மார்க்கம் தடுத்துள்ள உருவப்படங்கள், இசைகள், காட்சிகள் போன்றவற்றை விட்டும் தவிர்ந்திருப்பது அவசியமாகும் என தேவ்பந்த் ஃபத்வா நிலையம் ஃபத்வா வழங்கியுள்ளது.11
ஆகவே, அல்-குர்ஆனை ஓதுவதற்குச் செயலியைப் பயன்படுத்துவோர் குறித்த விடயத்தையும் கவனித்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
------------------------
[1] ومن المعروف أن القرآن كُتب ودُوِّن منذ عهد النبي صلى الله عليه وسلم في العُسب واللخاف والعظام والحجارة والجلود، وأكرم الله الصديق رضى الله عنه بعد مشورة الصحابة بجمعه وتدوينه في مصحف واحد وأتم الله النعمة على عثمان رضى الله عنه بتوحيد رسمه وجمع المسلمين عليه وتدوين المصاحف وإرسالها للأمصار مع الحفظة القارئين. وما يزال المسلمون يكتبون القرآن ويخطونه بأيديهم بدرجة عالية من الإتقان والتجويد دون أن يسقطوا منه حرفاً أو حركة، كيف لا وقد تكفل الله بحفظه في قوله تعالى:"إنا نحن نزلنا الذذكر وإنا له لحافظون" (الحجر: ٩). (تأريخ طباعة المصحف الشريف لرابطة العالم الإسلامي https://themwl.org/ar/node/39540 )
اتفق العلماء على استحباب كتابة المصاحف وتحسين كتابتها وتبيينها وإيضاحها وتحقق الخط دون مشقة وتعليقة قال العلماء ويستحب نقط المصحف وشكله فانه صيانة من اللحن فيه وتصحيفه (التبيان في آداب حملة القرآن ١/١٨٩ — النووي (ت ٦٧٦)
[2] (فَرْعٌ) الْقِرَاءَةُ فِي الْمُصْحَفِ أَفْضَلُ مِنْ الْقِرَاءَةِ عَنْ ظَهْرِ الْقَلْبِ لِأَنَّهَا تَجْمَعُ الْقِرَاءَةَ وَالنَّظَرَ فِي الْمُصْحَفِ وَهُوَ عِبَادَةٌ أُخْرَى (المجموع شرح المهذب - ط المنيرية ٢/١٦٦ — النووي (ت ٦٧٦) يُؤْخَذُ مِنْ هُنَا أَيْ مِنْ سَنِّ تَقْبِيلِ الْحَجَرِ الْأَسْوَدِ سَنُّ تَقْبِيلِ الْمُصْحَفِ (حاشية الجمل على شرح المنهج ٢/٤٣٧)
[3] إذا كتب القرآن في لوح فله حكم المصحف فيحرم مسه وحمله على البالغ المحدث هذا هو المذهب الصحيح وبه قطع الأكثرون (المجموع :٧٠/٢)
[4] (وَلَا يَحْمِلُ) فِي الْخَلَاءِ (ذِكْرَ اللَّهِ تَعَالَى) أَيْ مَكْتُوبَ ذِكْرٍ مِنْ قُرْآنٍ أَوْ غَيْرِهِ حَتَّى حَمْلُ مَا كُتِبَ مِنْ ذَلِكَ فِي دِرْهَمٍ أَوْ نَحْوِهِ تَعْظِيمًا لَهُ وَاقْتِدَاءً بِهِ ﷺ: «فَإِنَّهُ كَانَ إذَا دَخَلَ الْخَلَاءَ نَزَعَ خَاتَمَهُ وَكَانَ نَقْشُهُ ثَلَاثَةَ أَسْطُرٍ: مُحَمَّدٌ سَطْرٌ، وَرَسُولُ سَطْرٌ، وَاللَّهِ سَطْرٌ» رَوَاهُ ابْنُ حِبَّانَ فِي صَحِيحِهِ عَنْ أَنَسٍ... (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج ١/١٥٥ — الخطيب الشربيني (ت ٩٧٧)
وَشَمِلَ ذَلِكَ مَا لَوْ حَمَلَ مَعَهُ مُصْحَفًا فِيهِ - أي الخلاء - فَيُكْرَهُ. (نهاية المحتاج إلى شرح المنهاج ١/١٣٣ — الرملي، شمس الدين)
[5] يستحب أن يقرأ وهو على طهارة (التبيان في آداب حملة القرآن ١/٧٣ — النووي (ت ٦٧٦)
[6] وَيَحْرُمُ مَسُّهُ كَكُلِّ اسْمٍ مُعَظَّمٍ بِمُتَنَجِّسٍ بِغَيْرِ مَعْفُوٍّ عَنْهُ….قَالَ الزَّرْكَشِيُّ وَمَدُّ الرِّجْلِ لِلْمُصْحَفِ (تحفة المحتاج في شرح المنهاج )
وَفِي شَرْحِ م ر: وَيَحْرُمُ مَدُّ الرِّجْلِ إلَى جِهَةِ الْمُصْحَفِ وَوَضْعُهُ تَحْتَ يَدِ كَافِرٍ (حاشية البجيرمي على الخطيب ١/٣٧١ — البجيرمي (ت ١٢٢١)
[7] وَيَجُوزُ وَضْعُ الْمُصْحَفِ فِي رَفِّ خِزَانَةٍ وَوَضْعُ نَحْوِ تَرْجِيلٍ فِي رَفٍّ أَعْلَى مِنْهُ وَيَحْرُمُ وَضْعُ الْمُصْحَفِ عَلَى الْأَرْضِ بَلْ لَا بُدَّ مِنْ رَفْعِهِ عُرْفًا وَلَوْ قَلِيلًا. (حاشية البجيرمي على الخطيب)
[8] أما الصورة التى ليس لها ثبات واستقرار، وليست منقوشة على شيئ بصفة دائمة، فإنها بالظل أشبه منها بالصورة. ويبدو أن صورة التلفزيون والفيديو لاتستقر على شيئ فى مرحلة من المراحل إلا إذا كان في صورة "فيلم". فإن كانت صور الإنسان حية بحيث تبدو على الشاشة في نفس الوقت الذى يظهر فيه الإنسان أمام الكيمرا، فإن الصورة لا تستقر على الكيمرا ولا على الشاشة، وإنما هى أجزاء كهربائية تنتقل من الكيمرا إلى الشاشة وتظهر عليها بترتيبها الأصلية. ثم تفنى وتزول. وأما إذا احتفظ بالصورة فى شريط الفيديو، فإن الصور لاتنقش على الشريط وإنما تحفظ فيها الأجزاء الكهربائية التى ليس فيها صورة فإذا ظهرت هذه الأجزاء على الشاشة ظهرت مرة أخرى بذلك الترتيب الطبيعي، ولكن ليس لها ثبات ولا استقرار على الشاشة، وإنما هى تظهر وتفنى. فلايبدو أن هناك مرحلة من المراحل تنتقش فيها الصورة على شيئ بصفة مستقرة أو دائمة. وعلى هذا، فتنزيل هذه الصورة منزلة الصورة المستقرة مشكل، ورحم الله امرأ هداني للصواب فى ذلك، والله سبحانه أعلم. (الشيخ تقي العثماني في تكملة فتح الملهم 4:164)
[9] ذهب الفقهاء المعاصرون إلى عدم اعتبار الأجهزة المخزن فيها القرآن في حكم المصحف كالشيخ تقي العثماني والشيخ صالح المنجد والشيخ عبد الرحمن بن ناصر البراك والشيخ صالح الفوزان ودائرة الإفتاء المصرية ورجح في موقع إسلام ويب، ودائرة الإفتاء الأردنية
செயலியில் அல்-குர்ஆன் காட்சியளிக்கும் போது அது அல்-குர்ஆன் பிரதியாகக் கருதப்பட மாட்டாது என கூறும் ஃபத்வா மையங்கள்:
• https://shorturl.at/uNfzL - இஸ்லாம் வெப் - கட்டார்
• https://shorturl.at/YJv1T - இஸ்லாம் கிவ்ஏ – சஊதி அரேபியா
• https://shorturl.at/ZVKmK - الموسوعة الميسرة في فقه القضايا المعاصرة
[10] செயலியில் அல்-குர்ஆன் காட்சியளிக்கும் போது அது அல்-குர்ஆன் பிரதியாகக் கருதப்படும் என கூறும் ஃபத்வா மையம்:
https://shorturl.at/3duFe - பாகிஸ்தான் - பின்னூரியா ஃபத்வா மையம்
[11] https://darulifta-deoband.com/home/ur/the-holy-quran/167614 - இந்தியா - தேவ்பந்து ஃபத்வா மையம்