2024.06.05ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக் குழுவினரின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் ஊடகக்குழுவினரின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று தெஹிவளை 'ரோஸ்வூட் சிலோன்' வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
'மனித நேயத்திற்கான ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டிலுள்ள அச்சு ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் நவீன ஊடகங்கள் போன்றவற்றில் ஊடகப்பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஃபத்வாக் குழுவின் உதவி ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் அப்துல்லாஹ் ருஸ்னி அவர்களால் கிராஅத் ஓதப்பட்டது.
அதனையடுத்து ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் ஊடகக்குழுவின் செயலாளருமான அஷ்-ஷைக் எம். பாஸில் பாரூக் அவர்கள் சமுகமளித்திருந்த ஊடகவியலாளர்களை வரவேற்கும் முகமாக வரவேற்புரையை நிகழ்த்தினார்கள்.
வரவேற்புரையினை தொடர்ந்து 'ஜம்இய்யா கடந்து வந்த பாதை' எனும் தலைப்பிலான ஜம்இய்யா பற்றிய அறிமுகக் காணொளியொன்று திரையிடப்பட்டது.
அதனை தொடர்ந்து ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களால் ஜம்இய்யா பற்றிய அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது. மேலும் 'ஊடகவியலாளர்களுக்கான ஒழுங்கு விதிகள்' எனும் தலைப்பில் விளக்கக்காட்சிகளுடனான உரையும் அவரால் முன்வைக்கப்பட்டது.
செயலாளரது உரையினை அடுத்து 'ஊடகவியலாளர்களுக்கு ஜம்இய்யா விடுக்கும் செய்தி' எனும் தலைப்பில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் உரையொன்றை நிகழ்த்தினார்கள்.
இதன்போது நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஊடகவியலாளர்களால் ஜம்இய்யா தொடர்பிலான கேள்விகள் எழுப்பப்பட்டன. அக்கேள்விகளுக்கு ஜம்இய்யாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், ஊடகக்குழுவின் துணைச்செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் மற்றும் உப செயலாளர் அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாஸில் ஹுமைதி ஆகியோரால் பதில்கள் வழங்கப்பட்டன.
இறுதியாக ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.
இதில் ஜம்இய்யா சார்பில் தலைவர், பொதுச்செயலாளர், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜம்இய்யாவின் அலுவலக உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -