புகைத்தல் - ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

மே 31, 2024

ACJU/RPL/2024/16/24
2024.05.31 (1445.11.22)

புகைத்தல் என்பது சாதாரண ஒரு பழக்கமாக ஆரம்பமாகின்ற போதிலும் புகைபிடிப்பவர் மாத்திரமல்லாமல் அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் புகைபிடிக்காதவர்களையும் உடல், உள ரீதியான உபாதைகளுக்கு உள்ளாக்குகின்றது. மாரடைப்பு, பக்கவாதம், இதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய், நாட்பட்ட இருமல், புற்றுநோய்கள், நரம்புத்தொகுதி நோய்கள், இதயநோய்கள், சுவாசத்தொகுதி நோய்கள் என்பன அடங்குவதுடன், பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதற்கும் புகையிலை உட்கொள்ளுதல், புகைத்தல் என்பன காரணமாக அமைகின்றன.

ஒருவர் ஒவ்வொரு முறை புகையிலையை நுகரும் போதும், அவரது நுரையீரலின் ஆயுள் குறைகிறது. புகைப்பவரை மட்டுமன்றி அவரை சுற்றியிருக்கும் ஜீவன்களின் உடல் நலனையும் அது பாதிக்கிறது. உலக அளவில் சுமார் 08 மில்லியன் உயிர்கள் புகையிலையை சுவாசிப்பதனால் மாய்ந்து போவதாகவும் அவர்களில் 1.2 மில்லியன் பேர் புகைபிடிப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கின்றமையினால் மரணமடைவதாகவும் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

புகைத்தலினால் ஏற்படும் உயிர்ப்பலிகள் அல்லது தீயநோய்கள் ஏற்படுவதற்கான அனைத்து வழிகளையும் இஸ்லாம் முற்றாகத் தடைசெய்துள்ளது.

"உங்கள் கைகளால் அழிவினைத் தேடிக்கொள்ளாதீர்கள்." (அல் பகரா : 195)

அல்லாஹ்வின் இறுதித்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜில்:

'உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனிதமிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்தளவுக்குப் புனிதமானதோ, அந்தளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் பொருட்களும் உங்கள் மானங்களும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும்' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி : 67)

'ஒருவர் தனக்குத்தானே தீங்கிழைப்பதோ, பிறருக்குத் தீங்கிழைப்பதோ கூடாது' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அல் ஹாகிம் : 2345)

மனித உயிர், சன்மார்க்கம், பகுத்தறிவு, மானம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்தல் என்பது இஸ்லாத்தின் அடிப்படை இலக்காகும். புகைத்தல் பாவனையால் மனிதன் மேற்சொல்லப்பட்ட இஸ்லாத்தின் இலக்குகளை இழந்து, தன்னையே அழிவில் போட்டுக்கொள்வதுடன் பிறருக்குத் தீங்குவிளைவிக்கிறான்.

மனித சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாகவும் தீங்காகவும் அமையும் புகைபிடித்தல் அல்லது புகையிலைப் பாவனை அற்ற தேசத்தை உருவாக்க அனைவரும் பங்களிக்கவேண்டும். புகைத்தல் பாவனையாளர்களை இனங்கண்டு அவர்களை அதிலிருந்து விடுபடுவதற்கான சன்மார்க்க, உளவியல்சார் உளவளத்துறை ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்குவது பள்ளிவாயல் நிர்வாகங்கள், கதீப்மார்கள், மஸ்ஜித் சம்மேளனங்கள், ஏனைய சமூக நிறுவனங்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

ஒருவர் புகைத்தல் பழக்கத்தில் இருந்து விடுபடுவதென்பது தன்னைச் சுற்றியுள்ள தனது உறவுகள், நண்பர்களின் உயிரையும் சுற்றுச்சூழலின் தூய்மையையும் பாதுகாத்திடச் செய்யும் பாரியதொரு பங்களிப்பாகும்.

புகைத்தல் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் வருடாந்தம் மே மாதம் 31 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் உலக புகையிலை எதிர்ப்புத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலகில் சுமார் 14 நாடுகள் புகையிலை மற்றும் புகைபிடித்தல் அற்ற நாடுகளாக உள்ளதாக சில தரவுகள் குறிப்பிடுகின்றன. அவ்வாறான முன்மாதிரியான ஒரு நாடாக இலங்கையும் மாற்றப்பட வேண்டும். அல்லாஹு தஆலா எமது தேசத்தையும் சமூகத்தையும் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பானாக!

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் நாகூர் ளரீஃப்
செயலாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onவெள்ளிக்கிழமை, 31 மே 2024 04:36

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.