வக்ஃப் சொத்துக்களை நீண்ட காலத்திற்குக் கூலிக்குக் கொடுப்பது சம்பந்தமாக.

மே 06, 2024

ACJU/FTW/2016/42-268

[ 2016.11.08 (1438.02.07) அன்று வெளியிடப்பட்ட ஃபத்வா ]

 

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

வக்ஃப் என்பது நிலைத்திருந்து பயனளிக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு தர்ம காரியமாகும். வக்ஃப் செய்யப்பட்ட ஒரு பொருளை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ, கைமாற்றவோ கூடாது என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும்.

ஒரு பொருளை வக்ஃப் செய்த நபர் எந்த நோக்கத்துக்காக வக்ஃப் செய்தாரோ, அந்த நோக்கத்துக்குப் பங்கம் ஏற்படாமலும், அதனை மாற்றாமலும் பயன்படுத்துவது நிருவாகிகளின் கடமையாகும். அத்துடன் அப்பொருளை அது வக்ஃப் செய்யப்பட்ட நோக்கத்துக்கு மாறாகப் பயன்படுத்தவது மிகப் பெரிய தவறாகும்.

'உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது பேரீத்தம் பழத் தோட்டம் ஒன்றின் விடயத்தில் ஆலோசனை செய்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தோட்டத்தை வக்ஃப் நிய்யத்துடன் ஸதகா செய்யும் படியும் அவ்வாறு வக்ஃப் நிய்யத்துடன் ஸதகா செய்தால் அத்தோட்டம் மீண்டும் விற்கப்படவும் மாட்டாது, நன்கொடையாக வழங்கப்படவும் மாட்டாது, அனந்தரச் சொத்தாக்கப்படவும் மாட்டாது, இருப்பினும் அத்தோட்டத்தின் பழங்கள் தர்மம் செய்யப்படும் என்று கூறினார்கள்.' 1

தாரகுத்னியின் அறிவிப்பில் 'வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் காலமெல்லாம் அது வக்ஃப் செய்யப்பட்டதாகவே இருக்கும்' என வந்துள்ளது.2

வக்ஃப் சொத்துக்களைப் பராமரிப்பவர் அநாதைகளின் சொத்துக்களைப் பராமரிப்பவர் போன்றவராவார். எனவே அவர் அவற்றின் நலவை நோக்காகக் கொண்டு செயல்படுவது அவசியமாகும்.3

வக்ஃப் சொத்துக்களைக் கூலிக்குக் கொடுக்க முடியும். இருப்பினும் அவற்றின் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டு வருமானத்தில் குறைவு ஏற்படலாம் அல்லது அவை எதிர்காலத்தில் பறிபோகும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவற்றை நீண்ட காலத்திற்குக் கூலிக்குக் கொடுப்பது கூடாது. எனவேதான் வக்ஃப் சொத்தை மூன்று வருடங்களுக்குட்பட்ட காலத்திற்குக் கூலிக்குக் கொடுப்பது நல்லது என மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.4

மேலும் நீண்ட காலத்திற்குக் கூலிக்குக் கொடுப்பதனால் எதிர்காலத்தில் கூலிக்குக் கொடுக்கும் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டு வக்ஃப் சொத்துக்களின் வருமானத்தில் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு என்பதும் அதைக் கூலிக்குப் பெறுவர் உரிமைகோரும் நிலை ஏற்படலாம் அல்லது உரிய கவனிப்பின்றி அவை பறிபோகும் நிலை ஏற்படலாம் என்பன போன்றவையும் வக்ஃப் சொத்தை நீண்ட காலத்துக்குக் கூலிக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்கான காரணங்களாகும்.

வக்ஃப் சொத்தை கூலிக்குக் கொடுக்கும் பொழுது அவ்விடத்தில் அது போன்ற சொத்துக்கள் எந்தப் பெறுமதிக்குக் கொடுக்கப்படுகின்றதோ அதே விலைக்குக் கொடுப்பதும் அவசியமாகும். அதை விட குறைந்த பெறுமதிக்குக் கொடுத்தால் அந்த உடன்படிக்கை தானாகவே செல்லுபடியற்றதாகிவிடும்.

இவ்வடிப்படையில் சட்டத்தரணிகளின் ஆலோசனையுடன் வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான விடயங்களைக் கருத்திற்கொண்டு இரண்டு வருடங்களுக்குட்பட்ட காலத்திற்குக் கூலிக்குக் கொடுப்பதும் இரண்டு வருடங்களுக்கொருமுறை அவ்வுடன்படிக்கையைப் புதுப்பித்துக்கொள்வதும் வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் - ஃபத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

-------------------------------------------------------------------------

 

[1] روى البخاري (2764) ، ومسلم (1632) أن عمر بن الخطاب رضي الله عنه أراد أن يتصدق بنخل له ، فاستشار النبي صلى الله عليه وسلم ، فأمره أن يوقفه ، فقال صلى الله عليه وسلم : ( تَصَدَّقْ بِأَصْلِهِ ، لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ ) . ولفظ مسلم : (لَا يُبَاعُ أَصْلُهَا، وَلَا يُبْتَاعُ).

 

[2] قال الحافظ ابن حجر رحمه الله : زَادَ الدَّارَقُطْنِيُّ مِنْ طَرِيقِ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ : ( حَبِيسٌ [أي : وقف] مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ )  - باب الوقف للغني والفقير والضيف، كتاب الوصايا، فتح الباري

 

[3] وَصَرَّحُوا أَيْضًا بِأَنَّ النَّاظِرَ فِي مَالِ الْوَقْفِ كَالْوَصِيِّ وَالْقَيِّمِ فِي مَالِ الْيَتِيمِ، وَالْوَصِيُّ وَالْقَيِّمُ لَا يَجُوزُ لَهُمَا التَّصَرُّفُ إلَّا بِالْغِبْطَةِ وَالْمَصْلَحَةِ، وَلَا يُكْتَفَى فِيهِمَا بِقَوْلِهِمَا، بَلْ لَا بُدَّ مِنْ إثْبَاتِ إحْدَاهُمَا عِنْدَ الْقَاضِي،

 

[4] وَذَكَرَ أَبُو سَعِيدٍ الْإِصْطَخْرِيُّ فِي أَدَبِ الْقَضَاءِ لَهُ الَّذِي نَخْتَارُهُ أَنْ لَا يُؤَجَّرَ الْوَقْفُ أَكْثَرَ مِنْ سَنَةٍ أَوْ ثَلَاثِ سِنِينَ، وَلَا يَزِيدُ عَلَى الثَّلَاثَةِ إلَّا أَنْ يَقَعَ فِي ضَرَرٍ فَيَزِيدُ وَيَعْمَلُ مَا فِيهِ الصَّلَاحُ فِي الِاسْتِغْلَالِ،

Last modified onதிங்கட்கிழமை, 06 மே 2024 07:59

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.