எனது வாடிக்கையாளர் (கேள்வியில் 'A' என்று அழைக்கப்படுகிறார்). அவர் நீர்கொழும்பில் சைக்கில் விற்பனை நிலையம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த வேளையில் 2002 ஆம் ஆண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு கடன் தீர்க்க முடியாதவராக மாறியுள்ளார்.


'A' என்பவர் இன்னும் ஒரு வியாபாரியுடன் கொடுக்கல் வாங்கல் செய்து வந்துள்ளார். (அந்த வியாபாரி கேள்வியில் 'B' என்று அழைக்கப்படுகின்றார்) அவர் கொழும்பு- 12, டேம் வீதியிலுள்ள உள்ள சைக்கில் உதிரி பாகத்தின் இறக்குமதியாளரும் மொத்த விற்பனையாளருமாவார். 2002 ஆம் ஆண்டு இறுதியில் 'A' என்பவர் 'B' என்பவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் (100,000/-) கடனாக செலுத்தவேண்டியிருந்தது. 2002 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 'A' என்பவர் நடத்திக் கொண்டிருந்த தனது மூன்று (3) மில்லியன் மதிப்புள்ள கடையை 'B' என்பவரிடம் (வட்டியில்லா அடமான முறையில்) வைக்க நிர்பந்திக்கப்பட்டார்.


இவ்விருவருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அடகு உடன்படிக்கைப் பத்திரமானது (அடகு வைக்கப்பட்ட பொருள், கடன் கொடுத்த 'B' என்பவருக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தும்) உரிமை மாற்று பத்திரமாக மாற்றப்பட்டுள்ளது என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. 'A' என்பவர் 'B' என்பவருக்கு கடனாக மீளச்செலுத்த வேண்டிய ஒரு இலட்சம் ரூபாவில் (100,000/-) இருபதாயிரம் ரூபா (20,000/-) செலுத்தப்பட்டுவிட்டது. தற்போது 'A' என்பவர் செலுத்த வேண்டிய மீதித்தொகை என்பதாயிரம் ரூபாவாகும் (80,000/-) 'A' என்பவருக்கு இன்றுவரை இடையூறுயில்லாமல், தடையின்றி அடமானமாக வைக்கப்பட்ட அக்கடையை பாவிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில், 'A' என்பவர் மீளச்செலுத்த வேண்டியிருந்த மீதித்;தொகை எண்பதாயிரத்தைக் (80000/-) கொடுத்து, அந்த கடையை மீட்டெடுக்க முயன்றபோது 'B' என்பவர் அச்சொத்தை 'A' என்பவருக்கு மாற்றுவதற்கு இரண்டு இலட்சம் ரூபாய் (200,000/-) வழங்குமாறு கோரினார். இறுதியாக ஏற்கனவே செலுத்தப்பட்ட இருபதாயிரம் ரூபாய் (20,000/-) செலுத்திய போதிலும் ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் (150000/-) தருவதாக 'A' என்பவர் ஒப்புக்கொண்டார்.


எனது கேள்வி:

1. 'B' என்பவரின் கோரிக்கை இஸ்லாமிய மார்க்க சட்டப்படி அனுமதிக்கப்பட்டதா?
2. அடமானம் என்ற போர்வையில் உரிமை பத்திரத்தை முறையற்ற முறையில் செயல்படுத்தும்; 'B' என்பவர், அடமானக் காலப் பகுதிகளில் (2002 முதல் 2021 வரை) அடகு வைக்கப்பட்ட பொருளிலிருந்து முழுமையாக அல்லது அதன் ஒரு பகுதியை பயன் பெற 'A' என்பவரிடம் கோருவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா?

 

ACJU/FTW/2022/04/447


1443.07.05
2022.03.07

 

அஸ்லாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

 

பதில் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கேளூ ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


ஒருவர் தனக்குத் தேவையான பணத்தை அல்லது ஒரு பொருளை இன்னொருவரிடமிருந்து கடனாகப் பெறும்போது அதற்கு நம்பகமாக ஏதேனும் ஒன்றை கடன் கொடுத்தவரிடம் வைப்பதையே அடமானம் அல்லது ஈடுவைத்தல் எனக் கூறப்படும்.


கடன் கொடுத்தவர் கடனை மீட்டி எடுக்க முடியாத போது அடமானமாக வைக்கப்பட்டதிலிருந்து தனது பங்கை மார்க்க அடிப்படையில் பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். இவ்வடமானமுறை பிரயாணம், பிரயாணமல்லாத எல்லா நேரங்களிலும் அனுமதிக்கபட்டதாகும்.


இது சம்பந்தமாக அல்குர்ஆனில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதுள:


وَإِنْ كُنْتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِباً فَرِهَانٌ مَقْبُوضَة (البقرة: 283)


இன்னும், நீங்கள் பிரயாணத்தில் இருக்கும் பொது (அது சமயம் கொடுக்கல், வாங்கல் செய்ய அவசியம் ஏற்பட்டு) எழுதக்கூடியவரை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவர்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். (ஸுரதுல் பகரா : 283)


இதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக இருக்கின்றது:


عن عائشة رضي الله عنها: أن رسول الله صلى الله عليه وسلم اشترى من يهودي طعاما، ورهنه درعه. (صحيح البخاري: 2378இ كتاب الرهنஇ باب الرهن عند اليهود وغيرهم)

 

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு யூதரிடம் உணவை கடனாக வாங்கி அதற்குப் பகரமாக தனது கவசத்தை அடமானமாக வைத்தார்கள் என ஆயிஷா ரழியல்லாஹூ அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி: 2378)


வியாபாரம் செய்வதற்கு முடியுமான எப்பொருட்களையும் அடமானமாக வைக்க முடியும் என மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.


அடகு வைக்கப்ட்ட பொருளின் உரிமை அடகு வைத்தவருக்கே உரியதாகும். அதன் மூலம் கிடைக்கும் அனைத்து விதமான இலாபம், நஷ்டம் அவருக்கே சொந்தமாகும். கடன் கொடுத்தவரிடம் அப்பொருள் அமானிதப் பொருளாகவே இருக்கும். அவருடைய கவனக்குறைவின்றி அப்பொருளில் ஏதேனும் குறைபாடு ஏற்படுமாயின் அதற்கு அவர் பொறுப்பானவராகக் கருதப்படமாட்டார்.


கடன் கொடுத்தவர் அடகு வைக்கப்பட்ட பொருளிலிருந்து பயனடைவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். இதுவே இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். இன்னும், கடன் கொடுத்தவர் அதனை பயன்படுத்தினால் அதற்குப் பொறுப்பாளியாக ஆகிவிடுவார் என்பது ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். அவ்வாறு கடன் கொடுத்தவர் அடகுப்பொருளிலிருந்து பயனடைவதாக உடன்படிக்கையில் நிபந்தனையிட்டிருப்பின் அவ்வுடன்படிக்கை தானாக செல்லுபடியற்றதாக ஆகிவிடும்.


எனினும், வியாபாரத்தில் அடகு ஒப்பந்தம் செய்யப்பட்டு,அவ்வடகுப் பொருள் காலம் நிர்ணயிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் என்று நிபந்தனையிடப்பட்டிருப்பின்(உதாரணமாக்ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் என்று குறிப்பிடல்) அவ்வடகுப் பொருளை அடகு வைக்கப்பட்டவருக்குப் பயன்படுத்த முடியும். அவ்வாறான நிலையில் அடகுப் பொருள், கூலிக்கு வழங்கப்பட்ட பொருளாகவும், விற்பனை செய்யப்பட்ட பொருள் அதன் கூலியாகவும் கணிக்கப்படும். அடகு வைக்கப்பட்டுள்ள பொருளிலிருந்து அடகு வைத்தவர் பயனடைவதாயின் கடன் கொடுத்தவருக்கு பங்கம் ஏற்படாதவிதத்தில் பயன்பெற முடியும்.அதனை முழுமையாக விற்பனை செய்வது அல்லது அன்பளிப்பாக வழங்குவது அல்லது வக்ப் செய்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது கூடாது.


அடகு வைத்தவர் தான் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் அடமானமாக வைக்கப்பட்ட பொருளை கடன் கொடுத்தவரின் அனுமதியுடன் விற்று தனது கடன் தொகையை திருப்பிக் கொடுப்பார் அல்லது கடன் கொடுத்தவர் (அடகுவைக்கப்பட்டவர்) அடகு வைத்தவருடைய அனுமதியுடன் அவர் முன்னிலையில் அப்பொருளை விற்று தனது கடன் தொகையை மீட்டி எடுத்துக்கொள்வார்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்        

செயலாளர், பத்வாக் குழு                       

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா         

 

 

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

மேற்பார்வையாளர் - பத்வாப் பிரிவு   

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் 

பொதுச் செயலாளர்,                              

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா          

 

 

அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)

தலைவர்,           

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா