எம்மைப் பற்றி


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 1924 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும். ஜம்இய்யா 2000 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. ஜம்இய்யாவின் குறிக்கோள்கள் தொலைநோக்கு கொண்டதோடு முஸ்லிம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள. தற்போது ஜம்இய்யா 24 மாவட்டங்களில் 163 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 8000 க்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் ஜம்இய்யாவில் அங்கத்துவம் பெற்று உறுப்பினர்களாக உள்ளனர்.


ஜம்இய்யா தனது சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக சில உப குழுக்களைக் கொண்டுள்ளது. இக்குழுக்களில் ஜம்இய்யாவின் மூத்த உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து ஜம்இய்யாவின் ஊழியர்கள் ஆலிம்கள் (மார்க்க அறிஞர்கள்) விவகாரங்கள், முஸ்லிம் சமூக விவகாரங்கள், பிரஜைகள் விவகாரங்கள் மற்றும் அரச நிறுவனங்களுடனும் அதிகாரிகளுடனும் தொடர்புகளை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் ஈடுபடுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பணியாற்றி வருகின்றனர்.


நோக்கு (Vision):


இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் போதனைகளின் அடிப்படையில் வாழுகின்ற, தீனின் மேம்பாட்டிற்கும் சமூகத்தினதும் தேசத்தினதும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கின்ற ஒரு கட்டுக்கோப்பான முன்மாதிரி முஸ்லிம் சமூகத்தை நோக்கி.


பணிக்கூற்று (Mission):


முஸ்லிம் சமூகத்தின் எல்லா தரப்பினரையும் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க, பண்பாட்டு ரீதியாகவும் வழிகாட்டுவதும் சமூகத்தினதும் தேசத்தினதும் கல்வி, பொருளாதார, சமூக, கலாசார மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்வதும் சமூக ஒற்றுமையையும்; இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புதலும்.


குறிக்கோள்கள் (Objectives):


• சமூகத்தின் எல்லா தரப்பினரையும் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் ஆன்மீக ரீதியாக வழிகாட்டுதல்.
• நல்லொழுக்கமும் பண்பாடுமுள்ள தனிமனிதர்களும் குடும்பங்களும் உருவாக உழைத்தல்.
• உலமாக்களினதும் இஸ்லாமிய கல்வியினதும் மேம்பாட்டிற்கு உழைத்தல்.
• சமூகத்தினதும் நாட்டினதும் கல்வி, சமூக, பொருளாதார, கலாசார மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்தல்.
• சமூக ஒற்றுமைக்காக உழைத்தல்.
• இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல்.
• ஜம்இய்யாவின் நோக்கங்களை அடைவதற்கு தேவையான எல்லாச் செயல்களையும் கருமங்களையும் செய்தல்.

 

விழுமியங்கள் (Values):


• இஸ்லாமிய அடிப்படையிலானவை (Islamic)
• தேசியம் (Sri Lankan Identity)
• நடுநிலை போக்கு (Moderation)
• இணக்கப்பாடு (Accommodative)
• பன்மைத்துவம் (Diversity & Pluralism)

 

செயலகம்


ஜம்இய்யாவின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படும் செயலகம், உத்தியோகப்பூர்வ தொடர்பாடல்கள், சட்ட நடவடிக்கைகள், ஊடக விவகாரங்கள், மூலோபாய திட்டமிடல், நிகழ்ச்சி முகாமைத்துவம் மற்றும் ஜம்இய்யாவுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ளல் போன்ற செயலக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.


பிரிவு – 01: மூலோபாய திட்டமிடல் மற்றும் கொள்கை மேம்பாடு
சமூகத்திற்கு பயனுள்ள, வினைத்திறன் மிக்க சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக ஜம்இய்யாவின் செயற்பாடுகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவதில் இப்பிரிவு கவனம் செலுத்துகின்றது. நிலையான செயற்பாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure), கையேடுகள் (Manuals) மற்றும் உள்ளக செயற்பாடுகளைத் தரப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்கள் தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்டு குறிப்பிட்ட கால முடிவில் அவை இப்பிரிவினால் மதிப்பீடு செய்யப்படுகின்றது.


பிரிவு – 02: நிகழ்ச்சி முகாமைத்துவம் மற்றும் ஒருங்கிணைப்பு
ஜம்இய்யாவின் மாதாந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டங்கள், மத்திய சபைக் கூட்டங்கள் மற்றும் ஏனைய விசேடக் கூட்டங்கள் போன்றவற்றை இப்பிரிவு ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்கின்றது.


பிரிவு – 03: உத்தியோகப்பூர்வ தொடர்பாடல்கள்
ஜம்இய்யாவின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் உத்தியோகப்பூர்வ அறிக்கைகள் மற்றும் கடிதப் பரிமாற்றங்கள் ஆகியவை இந்தப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.


பிரிவு – 04: சட்டம் மற்றும் ஆய்வு
சட்ட விடயங்கள் மற்றும் ஆய்வு செயற்திட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகள் இந்த பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன. தேவைப்படும் போதெல்லாம், ஆலோசனை பெறுவதற்காக இப்பிரிவு சட்ட ஆலோசகர்களுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்கின்றது.


பிரிவு – 05: ஜம்இய்யாவுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்தல்.
சமூகத்திற்கும் நமது தாய்நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் ஜம்இய்யாவுடன் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களுடனும் அமைப்புக்களுடனும் உறவைக் கட்டியெழுப்புவதிலும் வளர்ப்பதிலும் இப்பிரிவு கவனம் செலுத்துகின்றது.


பிரிவு – 06: ஊடகம்
இஸ்லாமியப் போதனைகள் குறித்து முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில் ஊடக வெளியீடுகள் மூலம் தேசிய மற்றும் அன்றாட விவகாரங்களில் ஜம்இய்யாவின் நிலைப்பாட்டை மக்கள் மயப்டுத்தும் முக்கிய குறிக்கோளுடன் இப்பிரிவு நிறுவப்பட்டுள்ளது. மேலும் இப்பிரிவு ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மற்றும் சேவைகளை பல்வேறு வழிமுறைகள் மூலம் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது.


பிரிவு – 07: கிளைகள் மற்றும் அங்கத்துவம்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு நாடு பூராகவும் 163 கிளைகள் காணப்படுகின்றன. அதில் 139 பிரதேசக் கிளைகள் மற்றும் 24 மாவட்டக் கிளைகள் உள்ளடங்கியுள்ளன.
கிளைகளின் தெரிவு மூன்று வருடத்திற்கொருமுறை நடைபெற்று புதிய பதவி தாங்குனர்கள் நியமிக்கப்படுகின்றனர்.


இப்பிரிவின் செயற்பாடுகள் பின்வருமாறு:


 கிளைகளை மறுசீரமைத்தல்.
 ஃபத்வா பிரிவைத் தவிர்த்து, தலைமை அலுவலகத்தின் அனைத்து உப பிரிவுகளின் நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்துதல்.
 கிளைகளுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குதல்.
 ஒவ்வொரு கிளையின் செயற்திறன் மற்றும் சேவைத் தரங்களைக் கண்காணிப்பதோடு கிளைகளுடன் சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 அங்கத்துவம் வழங்கும் விடயத்தை முழுமையாகக் கையாளுதல்.


உப குழுக்கள் (உப பிரிவுகள்)


ஆலிம்கள் விவகாரங்கள்
1. ஆலிம்கள் விவகாரக் குழு
2. சமூக சேவைகள் குழு


முஸ்லிம் சமூக விவகாரங்கள்
3. ஃபத்வாக் குழு
4. பிறைக் குழு
5. கல்வி, ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு
6. தஃவா மற்றும் தர்பிய்யாவுக்கான குழு
7. மகளிர் விவகாரக் குழு


பிரஜைகள் விவகாரங்கள்
8. ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு


1. ஆலிம்கள் விவகாரக் குழு


இக்குழு சமூகத்திற்குச் சேவையாற்றி வரும் மார்க்க அறிஞர்களின் நலன்கள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்துகின்றது. ஆலிம்களுக்கு பின்வரும் சேவைகளை வழங்குவதை இக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது:


 சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து மத்ரஸா கல்வி முறையை தரப்படுத்தல்.
 ஆலிம்களின் ஆன்மீக, கல்வி மற்றும் திறன் அபிவிருத்திக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குதல்.
 முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு தகுதியான உலமாக்களை அடையாளம் கண்டு அவர்களை நிபுணத்துவத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி அவர்களை பயன்படுத்தல்.
 இஸ்லாமிய உயர்கல்வியை தொடர்வதற்கு உதவி செய்தல்.
 ஆலிம்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
 தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் பயிற்சிகளுடன் ஆலிம்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல்.
 மூத்த ஆலிம்களின் அர்ப்பணிப்புக்கள் மற்றும் சேவைகளை அடையாளம் கண்டு அவர்களைக் கௌரவித்தல்.

2. சமூக சேவைகள் குழு


ஜம்இய்யாவின் சமூக சேவைக் குழு நிவாரண உதவிகள், சமூக சேவைகள் மற்றும் உளவள ஆலோசனை வழங்குதல் ஆகிய பகுதிகளில் கவனம் செலுத்துகின்றது. இக்குழு அனர்த்த முகாமைத்துவம், புனர்வாழ்வு போன்ற விடயங்களில் ஆலிம்களுக்கான பயிற்சிகளை ஜம்இய்யாவின் கிளைகள் ஊடாக வழங்க ஏற்பாடு செய்து வருகின்றது. முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி மாற்று மதச் சகோதரர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் தன்னாலான உதவிகளை இக்குழு செய்து வருகின்றது.


சமூக சேவையில் குறித்த ஒரு விடயத்திற்காக சேகரிக்கப்பட்ட பணத்தில், அத்தேவை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் மீதமாகும் தொகை வேறொரு சமூக சேவைக்காகக் செலவிடப்படும் என்ற கொள்கையை இக்குழு நடைமுறைபடுத்தி வருகின்றது.

3. ஃபத்வாக் குழு


அன்றாடம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மார்க்க வழிக்காட்டல்களை வழங்கும் அங்கீகாரம் பெற்ற ஒரே நிறுவனமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இயங்கி வருகின்றது. வேறுபட்ட சிந்தனைகளைக் கொண்ட உலமாக்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தி மார்க்க வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் இப்பிரிவு செயற்பட்டு வருகின்றது. மக்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய விடயங்களில் மார்க்க சட்டங்களை எளிமையாக்கி முன்வைப்பதும் அமைதி மற்றும் நல்லிணக்க வாழ்க்கை முறையை உருவாக்குவதும் ஃபத்வாவின் நோக்கமாகும். ஃபத்வா பிரிவினால் வெளியிடப்பட்ட ஃபத்வாக்களில் அதிகமானவை சமூக, பொருளாதார, தனிப்பட்ட, குடும்ப வாழ்க்கை மற்றும் அனந்தரச் சொத்துக்களுடன் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


நாளாந்தம் உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும், எழுத்து மூலமும் ஃபத்வாக்கள் கேட்கப்படுகின்றன. மேலும், ஜம்இய்யாவின் காரியாலயத்துக்கு நேரடியாகவும் ஃபத்வாக்களை கேட்டு வருகின்றனர். இவ்வனைத்து கேள்விகளுக்கும் திறமையான மார்க்க அறிஞர்களினால் பதிலளிக்கப்படுகின்றது. பொதுவான கருத்து வேறுபாடற்ற விடயங்களுக்கு உடனடியாக பதில் அளிக்கப்படுவதுடன் கலந்துரையாடப்பட வேண்டிய ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் மாதாந்தம் நடைபெறும் ஃபத்வாக் குழு அமர்வின் போது முன்வைக்கப்படுகின்றன.

4. பிறைக் குழு


இஸ்லாமிய வழிகாட்டலுக்கமைய முக்கிய நிகழ்வுகளையும் நேரங்களையும் நிர்ணயிப்பதற்கு ஹிஜ்ரி கலண்டர் இன்றியமையாததாகும். ஹிஜ்ரி மாதங்களை நிர்ணயித்தல், தொழுகை நேரத்தை நிர்ணயித்தல் மற்றும் துல்லியமான கிப்லாவை அடையாளப்படுத்தல் ஆகிய பணிகளை இக்குழு மேற்கொண்டு வருகின்றது. சூரிய மற்றும் சந்திர கிரகணங்களைப் பற்றிய விழிப்புணர்வும் அச்சந்தர்ப்பத்திற்கான வழிகாட்டல்களும் இப்பிரிவுனூடாக வழங்கப்படுகின்றது.


உலகளாவிய ரீதியில் காணப்படுகின்ற பிறை மாதங்களை தீர்மானிப்பதற்கான முறைமைகளுக்கேற்ப நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள உப குழுக்களின் ஒத்துழைப்புடன் ஹிஜ்ரி மாதங்கள் முடிவு செய்யப்படுகின்றன. தலைப் பிறை தீர்மானம் சம்பந்தமான சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு கூட்டாகச் சென்று பிறை பார்க்கும் முறையை இக்குழு ஊக்குவித்து வருவதுடன், ஒவ்வொரு ஊரிலும் காணப்படும் ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளின் பிரதிநிதிகள் மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டு கூட்டாக பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதோடு அதற்குத் தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றது.


பிறை மாதங்களை தீர்மானிப்பதற்கான 05 அடிப்படைகளை மையமாகக் கொண்டு பிறை மாதம் தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை கொழும்பு பெரிய பள்ளிவாயல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியன இணைந்து மேற்கொள்கின்றன. பின்னர், இது பற்றி மக்களுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.


டிஜிட்டல் ஹிஜ்ரி கலண்டர் மின்னஞ் மூலம் விநியோகிக்கப்பட்டு ஜம்இய்யாவின் உத்தியோகப்பூர்வ இணையதளத்திலும் பதிவேற்றப்படுகின்றது. மாதாந்த ஹிஜ்ரி நாட்காட்டியின் அச்சிடப்பட்ட பிரதிகள் வருடாந்த சந்தாதாரர்களுக்கு தபால் மூலமும் அனுப்பி வைக்கப்படுகின்றது.


நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி முடிவு செய்யப்படும் கிப்லா திசை பல சந்தர்ப்பங்களில் தவறாக அமைவதால் அதனை முடிவு செய்வதற்கு சூரியனைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் இக்குழு கவனம் செலுத்தி வருகின்றது. இது தொடர்பில் பயிற்சிநெறிகள் ஜம்இய்யாவின் கிளைகள் ஊடாக தேவைக்கேற்ப நடாத்தப்பட்டு வருகின்றன.

5. கல்வி, ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு


கல்வி: பெறுபேறுகள் மற்றும் ஒழுக்க நெறியில் முன்னேற்றம் தேவைப்படும் பாடசாலைகளை அடையாளங் கண்டு, விஞ்ஞான ரீதியாக ஆய்வுகளை இக்குழு மேற்கொள்கின்றது. பின்னர், பின்தங்கிய மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆன்மீக மற்றும் கல்வி ரீதியான ஊக்கமளிக்கும் நிகழ்ச்சிகளையும் பயிற்சிகளையும் வழங்குகிறது. மேலும், அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் கற்றல் மற்றும் கற்பித்தல் சூழலை உருவாக்க இப்பிரிவு உதவுகிறது. குறிப்பாக இக்குழு கொழும்பிலுள்ள பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு அதன் திட்டங்களை வகுத்துள்ளது.


அல்குர்ஆன் மத்ரஸா: அல்குர்ஆன் மத்ரஸா கல்வி முறையை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தைக் கண்டறிந்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அல்குர்ஆன் மத்ரஸாவுக்கான கட்டமைப்பு மற்றும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு செயற்திட்டத்தை தொடங்கியது. புனித அல்குர்ஆனை ஓதுவதற்கும், சரியான முறையில் அதனை விளங்குவதற்கும் இங்கு கற்பிக்கப்படுவதோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்கள், 'ஆதாப்' (நல்லொழுக்கம், நன்னடத்தை), 'அஃலாக்' (பண்பாடு, உயர்ந்த சமூக நடத்தை), சகவாழ்வு, இஸ்லாமிய வரலாறு மற்றும் அரபு மொழி ஆகியவை இப்பாடநெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


இந்தப் பாடத்திட்டமானது அனைத்து வகையான தீவிரவாத, பயங்கரவாத சிந்தனைகளிலிருந்தும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்டதாகும். இஸ்லாத்தை கற்பிப்பதற்கான பாடத்திட்ட வரைபை உருவாக்கிய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்கள் மற்றும் அதன் அதிகாரிகளின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளின்படி இப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.


புனித அல்குர்ஆன், சுன்னா மற்றும் இஸ்லாமிய போதனைகளை கற்றுக்கொள்வதில் மாணவர்களிடையே ஆர்வத்தை வளர்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட இந்த செயற்திட்டம் அல்குர்ஆன் மத்ரஸாக்களின் மேம்பாட்டிற்காக ஜம்இய்யா மேற்கொண்ட பாரியதொரு திட்டமாக காணப்படுகின்றது.


ஆய்வு மற்றும் வெளியீடுகள்: இஸ்;லாமிய தலைப்புக்களில் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்கள் ஆகியவற்றை வெளியிடுவதோடு, முக்கியமான புத்தங்களை அவற்றின் மூல மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பதும் இந்த குழுவின் பணியாகும். செய்திமடல்கள், பத்திரிகைகள் மற்றும் பிற இதழ்கள் உள்ளிட்ட இஸ்லாமிய வெளியீடுகளை ஆய்வு செய்து, அகீதாவுடன் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் அதற்குரிய வழிகாட்டல்கள் உரியவர்களுக்கு இக்குழு மூலம் வழங்கப்படுகின்றது.

6. தஃவா மற்றும் தர்பிய்யாக் குழு


பிரச்சாரம்: இக்குழு மார்க்கத்தின் பெயரால் ஊடுறுவும் பிழையான கொள்கைகள் மற்றும் அமைப்புக்கள் விடயத்தில் மக்களுக்கு வழிகாட்டுவதில் கவனம் செலுத்துகின்றது.


மஸ்ஜித் நிர்வாகங்களின் வேண்டுகோளுக்கிணங்க இமாம் மற்றும் முஅத்தின்களுக்கான பயிற்சிநெறிகளை நடாத்துதல், பிற சமூகங்களுடன் எவ்வாறு சகவாழ்வை மேற்கொள்ளுதல் ஆகிய வழிகாட்டல்களை இக்குழு வழங்குகின்றது.


ஹஜ், ரமழான், குடும்ப வாழ்க்கை, ஒற்றுமை மற்றும் சகவாழ்வை மேம்படுத்துதல் போன்ற தலைப்புக்களில் பொது மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இக்குழு ஜம்இய்யாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகள் மூலமாக நடாத்துகிறது. பெரும் பாவங்களிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டுதல்களும் இப்பிரிவுனூடாக மேற்கொள்ளப்படுகின்றது.


தவறான இயக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்து நடத்துவதோடு, இது தொடர்பில் பொதுமக்களை வழிநடாத்த தேவைக்கேற்ப உலமாக்களுக்கு ஆலோசனை வழங்குகின்றது.


இளைஞர் விவகாரம்: இக்குழு சிறந்ததொரு இளைஞர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கின்றது.


நவீன சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட, நாட்டுப் பற்று மற்றும் ஆன்மீக ரீதியில் மேம்பட்ட இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக நாடு முழுவதும் உள்ள ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகள் மூலம் பல திட்டங்கள் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், இக்குழு போதைப் பழக்கமுள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ஆலோசனைகளை வழங்குகின்றது.


இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கக்கூடிய அனைத்து வகையான தீமைகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு சமூகப் பொறுப்பாகும். இப்பிரிவு இளைஞர்களுக்கு ஆன்மீக ரீதியாக வழிகாட்டுவதோடு சமூகத்தின் எதிர்காலத் தலைவர்களாக அவர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.


இளைஞரின் அடிப்படைத் திறன்களைக் கண்டறிந்து அவர்களை வலுவூட்ட வேண்டிய அவசியம் காணப்படுவதால், உயர்கல்வியை தேர்வு செய்வதற்கும், தேவையான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கும், அவர்களின் திறன்களை அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு மேம்படுத்துவதற்கான உத்திகளை உருவாக்குவதற்கும் சாத்தியமான வழிமுறைகளை இப்பிரிவு ஆராய்கின்றது.

7. மகளிர் விவகாரக் குழு


மகளிர் விவகாரக் குழுவின் நோக்கம் பெண்களுக்குத் தேவையான மார்க்க விளக்கங்களை வழங்குவதோடு பொருத்தமான வழிகளில் சமூகத்திற்கு சேவை செய்வது பற்றிய வழிகாட்டல்களை அவர்களுக்கு வழங்குவதாகும். எனவே இக்குழு பெண்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக ஜம்இய்யாவின் கிளைகள் ஊடாக மாதாந்த நிகழ்ச்சிகளை நடாத்துவதுடன் அவர்களின் சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பயனுள்ள விடயங்களுக்கும் வழிகாட்டுகின்றது.


இக்குழுவானது ஜம்இய்யாவின் கிளைகளுடன் இணைந்து பெண்களுக்கான திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகளையும் கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.


8. ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு


இக்குழு மனிதாபிமான விழுமியங்களில் கவனம் செலுத்துகிறது. இந்நாட்டில் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடித்து வரும் ஒற்றுமை மற்றும் சகவாழ்வை வளர்ப்பதற்கு இக்குழு பாடுபடுகின்றது.
இஸ்லாமிய கொள்கைக்குட்பட்ட தஃவா அமைப்புக்கள், தரீக்காக்கள் போன்றவற்றிற்கிடையில் ஒருங்கிணைத்து சமூக ஒற்றுமையையும் இணக்கப்பாடையும் கட்டியெழுப்ப இக்குழு முயற்சிக்கின்றது. மேலும், முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வையும் சகவாழ்வையும் ஏற்படுத்த பல திட்டங்களை வகுத்து செயற்படுத்துகின்றது.


இக்குழு இந்நாட்டில் வாழும் பல்லின சமூகங்களுக்கு மத்தியில் கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதன் மூலம் சமூகங்களுக்கு மத்தியில் நல்லுறவை கட்டியயெழுப்ப முன்னின்று செயற்படுவதோடு முஸ்லிம்களுக்கு நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வின் முக்கியத்துவம் பற்றிய வழிகாட்டல்களை ஜுமுஆ உரைகள் போன்றவற்றின் மூலம் வழங்குகின்றது.